செவ்வாய், 8 நவம்பர், 2016

செங்கொடிக்கே!






மார்க்சிய - லெனினியப் பாதையில் இந்தியாவிலும் சோசலிசத்தை நிலைநாட்டுகிற இயக்கம் வெற்றி பெறும்; இறுதி வெற்றி செங்கொடிக்கே என்பதுதான் நவம்பர் புரட்சியின் செய்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா நேர்காணல்




நவம்பர் புரட்சி நடந்த முதல் காலகட்டத்தில் பிறந்தவர் நீங்கள். ஒரு மாணவராக வளர்ந்து, விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்கத் தொடங்கியபோது, அந்தப் புரட்சியின் வரலாற்றையும் அதன் மகத்தான சாதனைகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம், சிந்தனைகள் பற்றிச் சொல்லுங்கள்.
தீக்கதிர் வாசகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1937-38-ஆம் ஆண்டுகளில் மாணவர் இயக்கத்தை உருவாக்கிச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது அந்த யுகப்புரட்சி பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டேன். லெனின் தலைமையில் ரஷ்யாவில் நடந்த அந்தப் புரட்சி அங்கே அடிமைப்பட்டுக்கிடந்த மக்களை மட்டும் விடுவிக்கவில்லை, பிரிட்டிஷ் அரசின் பிடியில் இருந்த காலனி நாடுகளின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெரும் எழுச்சியை ஊட்டி அந்த நாடுகளின் விடுதலைக்கும் வழிவகுத்தது. அந்தப் புரட்சியின் பலனாக உருவான சோசலிச சோவியத் யூனியன் அரசும், அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சுதந்திரப் போராட்டத்தையும் பேரலைகள் போல ஏற்படுத்தின. இந்தியாவிலும் சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. தமிழகத்தில் சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை ஏற்றி இங்கே இயக்கத்தை உருவாக்கியிருந்தார். 1929-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்குப் போடப்பட்டது. மீரட் சதி வழக்கு என்றே அதற்குப் பெயர். மக்களிடையே அது பெரிய சிந்தனையை விதைத்தது. 1934-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் சோசலிஸ்ட்டுகள் உருவாகியிருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் இணைந்து போராடத் தொடங்கினார்கள். அப்படி உருவாகி வந்த பி. சுந்தரய்யா, பி. ராமமூர்த்தி, இ.எம்.எஸ்., ஜீவா, ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்கள் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார்கள். இதற்கெல்லாம் உந்து சக்தியாகத் திகழ்ந்தது ரஷ்யப் புரட்சிதான். 1940-ஆம் ஆண்டில் மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை அமைத்து இயங்கிக்கொண்டிருந்தோம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம். 1930-ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் இட்லர் அதிகாரத்திற்கு வந்தவுடன் உலக ஆதிக்கத்திற்காகத் திட்டமிட்டான். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சோவியத்நாட்டை இட்லர் அழிக்க வேண்டுமென்பதற்காக ஜெர்மனிக்கு தொழில் மற்றும் பொருளாதார உதவி செய்தன. 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இட்லர் பிரிட்டனையும் பிரான்சையும் தாக்கினான். பின் 1941-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சோவியத் நாட்டின் மீது படையெடுத்தான். சோவியத் மக்கள் ஸ்டாலின் தலைமையில் வீரப்போர் புரிந்தனர். இட்லர் வெற்றி பெற்றால் உலகத்திற்கே ஆபத்து என்று உணர்ந்த பிரிட்டனும், பிரான்சும் சோவியத் நாட்டுடன் சேர்ந்து ஜெர்மனிக்கு எதிராகப் போராடத் தொடங்கின. அமெரிக்காவும் இதை ஆதரித்தது.ரஷ்யாவுக்கு ஏற்படும் ஆபத்து நமக்கும் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அறிவித்தார். 2 கோடி சோவியத் மக்களைப் பலி கொண்ட அந்த யுத்தத்தின் முடிவில் ஹிட்லர் மட்டுமல்லாமல், இனவாத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி அடிமைப்படுத்திய பாசிச சக்திகளும் முறியடிக்கப்பட்டன. அந்த வெற்றி, ஐரோப்பாவில் பல சோசலிச நாடுகள் உருவாக வழிவகுத்தது. ஏகாதிபத்திய முகாம் என்பது மட்டுமே இருந்த உலகத்தில் சோசலிச முகாம் என்பதும் உருவானது. அந்த வயதில் இந்த நிகழ்ச்சிப்போக்குகளும் சோசலிச சோவியத் யூனியனின் மகத்தான சாதனைகளும் அதற்கு அடித்தளமாக இருந்த கம்யூனிச சித்தாந்தமும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவில், தமிழகத்தில் மக்களை அடிமை நிலைமையிலிருந்து விடுவிக்கவும் சமத்துவமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து உற்சாகத்தோடும் உறுதியோடும் போராடுவதில் என்னைப் போன்றோர் ஈடுபடுவதற்குப் பெரும் உந்துசக்தியாக அவை அமைந்தன.
பாசிச சக்திகள் முடியடிக்கப்பட்டது பற்றிச் சொன்னீர்கள். இந்தியாவில் அதைப் போலப் பாசிச குணத்தோடு இன்று மக்களைப் பிளவுபடுத்துகிற சக்தி அரசியல் களத்தில் வெற்றிபெற்று ஆளுமை செலுத்துகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்கொள்வதில் நவம்பர் புரட்சி அனுபவம் எந்த அளவுக்கு நமக்கு ஒரு வழிகாட்டியாக அமைபும்?
வகுப்புவாத சக்திகளின் சித்தாந்த அடிப்படையைத் தகர்க்க வேண்டும். அதற்கு அறிவியல்பூர்வ அணுகுமுறை தேவை. அந்த அணுகுமுறையை மார்க்சியம் நமக்கு வழங்குகிறது. மார்க்சியம் வெல்ல முடியாதது, ஏனென்றால் அது உண்மையானது. அந்த உண்மையை அடித்தளமாகக் கொண்டுதான் சோவியத் அரசு பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்துவது என்ற சிந்தனையோடு செயல்பட்டது. சோவியத் யூனியனோடு இணைந்த அனைத்துப்பகுதி மக்களின் மொழிகளும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. பாசிச சக்திகளை முறியடிப்பதில் ஸ்டாலின் வகுத்த வியூகம் எப்படி வெற்றிபெற்றது என்பது உலக வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம். இந்தியாவில், தமிழகத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அடிப்படை மாற்றங்களுக்காக மக்கள் ஒன்றுபடுவதைத் தடுக்க மத உணர்வுகளும், சாதி வெறியும் கிளப்பப்படுகின்றன. அதை முறியடிக்க வேண்டுமானால், மார்க்ஸ் முழங்கினாரே, ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்,’ என்று, அந்த முழக்கத்தை வலுவாகவும், செயல்முனைப்போடும் இன்று நாம் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட தொழிலாளிகள் - விவசாயிகள் அணி கட்டப்பட வேண்டும். அப்படியொரு முற்போக்கான அணியைக் கட்டுவதில், அதே போன்ற விரிவான மக்கள் அணியைக் கட்டிப் பெரும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய நவம்பர் புரட்சி நமக்கு நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பாடம்தான்.
அரசியல் களத்தில் சோவியத் புரட்சியின் தாக்கங்கள் பற்றியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் சொன்னீர்கள். மக்களின் வாழ்க்கையில், பண்பாட்டுத் தளத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் எப்படிப்பட்டவை?
சமுதாய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சோவியத் புரட்சி தாக்கங்களை ஏற்படுத்தியது, மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது. அமீர் ஹைதர் கான் என்ற தோழரை கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது என் நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவான பலருக்கும் பயிற்சியளித்தவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு அவரை அழைத்து வந்தார்கள். உள்ளே நுழைகிறபோதே, அந்த முதுபெரும் வயதிலும் கம்பீரம் குறையாமல் கரம் உயர்த்தி உணர்ச்சி பொங்க ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கம் எழுப்பினார். அந்த உணர்வை இன்றைய இளம் தலைமுறை உள்வாங்கிக்கொண்டு செயல்படுமானால் இங்கேயும் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். சோவியத் புரட்சி இந்தியாவிலும் தமிழகத்திலும் கலை இலக்கிய உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. அன்றைய காலகட்டத்தில், அரசியல் மாற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும் வலியுறுத்துகிற உயிரோட்டமுள்ள நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எண்ணற்ற நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என்று இலக்கியத்தில் ஏற்பட்ட முற்போக்கான மாற்றங்கள் தனி வரலாறாகவே சொல்லப்பட வேண்டியது. 1936-ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமும் அமைக்கப்பட்டன. விவசாயிகள் சங்கமும் மற்ற அமைப்புகளும் விவசாயிகளையும் பிற பகுதி மக்களையும் அணி திரட்டிக்கொண்டிருக்க, அவர்களுக்குத் தத்துவ உறுதியையும் மாற்றம் பற்றிய நம்பிக்கையையும் விதைப்பதில் முற்போக்குக் கலை இலக்கியப் படைப்புகள் பங்காற்றின. அவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக அன்றைக்கு மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெண்களிடையேயும் செயல்பட்ட இளம் தோழர்கள் பின்னர் கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவெடுத்தார்கள். இன்றைய இளம் தோழர்கள் இந்தப் புரிதலோடு மக்களோடு இரண்டறக் கலந்து செயல்பட வேண்டும். இடதுசாரி மனப்போக்கு உள்ளவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அண்மையில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பிளீனம் வழிகாட்டியிருப்பது போல், சாதிய, மதவாத சக்திகளை எதிர்கொள்ள உழைப்பாளி மக்களிடையே வர்க்க உணர்வை வளர்க்க வேண்டும். அதற்கு இன்றைய முற்போக்குக் கலை இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் பங்கை அளிக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்படும் இளைய தோழர்களால் தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் பலமான கம்யூனிஸ்ட் இயக்கம் வளரும். அது அரசியலிலும் மக்கள் வாழ்க்கையின் கலாச்சாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் முற்போக்கான மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்குச் சவாலாக வந்திருக்கிற சாதிய, மதவாத சக்திகள் முறியடிக்கப்படும் என்றும் நம்புகிறேன்.
சோவியத் யூனியன் இன்று இல்லை என்ற பின்னணியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுவதன் இன்றைய பொருத்தப்பாடு என்ன? அதன் செய்தி என்ன?
உழைப்பாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவது சாத்தியமா என்று கேட்டார்கள். அது சாத்தியம் என்று நிரூபித்துக்காட்டினார்கள் நவம்பர் புரட்சியை நடத்திய மக்கள். உலகம் முழுவதுமாக மாற்றம் ஏற்படாமல் ஒரு நாட்டில் மட்டும் சோசலிச மாற்றம் என்பது நடக்குமா என்று கேட்டார்கள். சோவியத் மக்கள் அதை நடத்திக்காட்டினார்கள். சுரண்டலின் முற்றிய வடிவமான முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டுச் சமத்துவத்தின் அடித்தளமான சோசலிசம் நிலைநாட்டப்படுவதற்கான முதல்படிதான் சோவியத் அனுபவம். உலக மக்களை வாட்டுகிற வறுமை, சுகாதாரமின்மை, கல்வியின்மை, மனித உரிமைகள் மறுப்பு போன்ற எல்லா அவலங்களும் நீங்க வேண்டுமானால், உலக முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு உழைக்கும் வர்க்க அரசுகள் உருவாவதே வழி. அதை நடைமுறையில் செய்து காட்டியது சோவியத் யூனியன். இன்று சோவியத் யூனியனும், ஐரோப்பியாவில் இருந்த சோசலிச அரசுகளும் இல்லை என்பது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். சோவியத் யூனியன் இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் சோவியத் புரட்சி மறையவில்லை. இந்தப் பின்னடைவையும் கூட, உலக அளவில் மாற்றத்தை நோக்கிச் செல்கிற காலகட்டத்தில் கிடைத்திருக்கிற நடைமுறைப் படிப்பினைகளாகவே பார்க்கிறேன். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் மக்களின் பல்வேறு எழுச்சிகரமான போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதை என்னுடைய நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காண்கிறேன். மார்க்சிய-லெனினியப் பாதையில் நமது நாட்டிலும் சோசலிசத்தை நிலைநாட்டுகிற இயக்கம் வெற்றி பெறும், செங்கொடி வெற்றி பெறும். மார்க்சியம் வெற்றிபெறும், இதுதான் நவம்பர் புரட்சியின் செய்தி!

இறுதி வெற்றி





நவம்பர் புரட்சி இந்திய விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது; அதன் நூற்றாண்டு இந்திய புரட்சி இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நேர்காணல்



நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட இருக்கிறார்கள். அந்தப் புரட்சி பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொண்டது எப்போது? எந்தப் பின்னணியில் அதைத் தெரிந்துகொண்டீர்கள்?
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில்தான் சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அறியத் தொடங்கினேன். உலகத்தையே ஆக்கிரமிக்கிற நோக்கத்தோடு ஹிட்லரின் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளையெல்லாம் ராணுவ பலத்தால் பிடித்த பிறகு, சோவியத் யூனியனையும் பிடிக்கத் திட்டமிட்டது, அப்போது அதை அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டுகொள்ளாமல் விட்டன. அந்த நாடுகளுக்கு எதிராகவும் ஹிட்லர் படையனுப்பப்போவது தெரிந்த பிறகுதான் அவை ஸ்டாலினோடு பேச்சு நடத்தி ஒரு அணியமைத்தன... இப்படியான செய்திகள் வழியாகத்தான் அப்போது சோவியத் யூனியன் எனக்கு அறிமுகமானது. அதே காலகட்டத்தில், சென்னை மாகாணத் தேர்தல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது. யுத்தம் தொடர்பாக இங்கே பெரிய விவாதம் நடத்தப்பட்டது. யுத்தத்தில் ஆள் வடிவிலோ பொருள் வடிவிலோ இந்தியாவிலிருந்து பங்கேற்கக்கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டே உலக யுத்தம் பற்றிய செய்திகளைப் படித்தோம். இரண்டு கோடி மக்களின் உயிரைப் பறித்தது அந்த யுத்தம். மிக அதிகமாகத் தன் மக்களை இழந்தது சோவியத் யூனியன்தான். சோவியத் யூனியனின் வீரமும் தியாகமும்தான் இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
அப்போது உங்கள் உணர்வு எவ்வாறு இருந்தது?
சோவியத் யூனியன் அந்த யுத்தத்தை எவ்வாறு கையாண்டது என்பதைக் கவனித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றேன். யுத்தத்தில் மகத்தான வெற்றிபெற்றாலும் எந்த நாட்டையும் சோவியத் அரசு அடிமைப்படுத்தவில்லை. மாறாக, ஜெர்மன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நாடுகள் சுதந்திர நாடுகளாக, தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவே சோவியத் யூனியன் உதவியது. யுத்தம் என்றாலே நாடுகளைக் கைப்பற்றுவதுதான் என்ற வரலாற்றில், முதல் முறையாக இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியது சோவியத் யூனியன். இதனால் அந்த நாட்டின் மீது ஒரு மதிப்பு உருவானது. நம் பாரதி எழுதிய "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி" பாடல் ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது. அதுவரையில் பாரதியின் "வந்தே மாதரம்" போன்ற பாடல்களைத்தான் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பாடிக்கொண்டிருப்போம். இந்தப் பாடல் புதிய பார்வையைக் கொடுத்தது. சோவியத் புரட்சி உலகம் முழுவதும் பேரெழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரநாயகரான பகத் சிங், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுவாகக் காலை நான்கு மணிக்குத்தான் தூக்கில் போடுவார்கள். ஆனால், பகத் சிங்கை முதல் நாள் மாலை நான்கு மணிக்கே தூக்கில் போட்டார்கள். அதற்குக் காரணம், முதல் நாளே தூக்கில் போட்டுவிட்டால், நேற்றே முடிந்துவிட்டது என்ற உணர்வின் பெரும் கொந்தளிப்பாக அது மாறாது என்று கணக்குப் போட்டதுதான். தூக்கில் போட அழைத்துச் செல்ல சிறையதிகாரிகள் வந்தபோது பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார், அது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்.’ இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கத்தில் நவம்பர் புரட்சி பற்றியும், சோவியத் நாடு பற்றியும் பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்கத்தான், பாரதி எழுதியதும் பகத் சிங் படித்ததும் வெறும் செய்தி என்ற அடிப்படையில் அல்ல, தமிழகத்திலும் இந்திய அளவிலும் புரட்சிகரமான மாற்றங்கள் விளைய வேண்டும் என்ற தாகத்தோடுதான் என்பதையும் புரிந்துகொண்டேன். நம் பாரதிதாசனும் புதிய கோணத்தில் சோவியத் புரட்சி பற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் சிங்காரவேலர் செங்கொடி ஏற்றி இயக்கத்தைத் தொடங்கியதன் பின்னணியில் சோவியத் புரட்சியின் தாக்கமும் இருக்கிறது. சுதந்திர இந்தியா உருவான பிறகு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி நிற்பதற்காக, மற்ற நாடுகள் உதவ முன்வராத நிலையில் சோவியத் யூனியன்தான் பேருதவி செய்தது. கைம்மாறு எதிர்பாராத உதவி அது. ஒரு நாடு இப்படித் திகழ முடியுமா என்று யோசித்தபோது, அதற்கு அடித்தளமாக சோசலிச அறம் இருப்பது தெளிவானது.
பொதுவாக ஒரு நாட்டில் அரசியல் எழுச்சியும் ஆட்சி மாற்றமும் நடக்கிறது என்றால் அது அந்தந்த நாட்டோடு நின்றுவிடும். ஆனால் சோவியத் புரட்சி உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு லெனின், ஸ்டாலின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். நீங்கள் சோசலிச அறம் பற்றிச் சொன்னீர்கள், இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியதில் நவம்பர் புரட்சியின் அறம் என்ன?
நீங்கள் சொன்னது போல், அது வரையில் பல நாடுகளில் அரசியல் எழுச்சிகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது ஆள்கிறவர்கள் மாறுவார்கள். ஆனால், அடிப்படையான வேறு மாற்றங்கள் எதுவும் நடக்காது. இதுவோ பாரதி சொன்னதுபோல் உலகத்துக்கொரு புதுமை என்பதாக, அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்தியது. முதலில், சமுதாய மாற்றத்திற்கான லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பெருந்திரள் மக்கள் அந்த அரசியல் மாற்றத்தில் பங்கேற்றார்கள் என்பதே முக்கியமான மாற்றம்தான். அடுத்து, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்கான கடைகள் அதுவரையில் ஜார் மன்னனின் கடைகளாகவே இருக்கும். பணம் மன்னனுக்குத்தான் போய்ச்சேரும். இப்போது தங்களுடைய கடைகள், அதன் வருவாய் அரசின் மூலம் தங்களுக்கே வரும் என்ற மாற்றம் நிகழ்ந்ததை அந்த மக்கள் கண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியாக சோவியத்தின் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கினார்கள். சோவியத் அரசு பொறுப்பேற்றதும், "வேறு எந்த நாட்டின் மீதும் நாங்கள் படையெடுக்க மாட்டோம். எங்கள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்துவோம்" என அறிவித்தது. சமாதானத்தையே முதல் அறிவிப்பாக வெளியிட்டது. வேறு எந்த நாட்டின் அரசும் அதுவரையில் இப்படி அறிவித்ததில்லை. அதே வேளையில், உலகம் முழுவதும் மாற்றங்களுக்காகப் போராடுவோருக்கு சோவியத் அரசு துணைநின்றது. ஏகாதிபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியது. சோவியத் அரசு மக்களின் மதச் சுதந்திரத்திற்கு உறுதியளித்தது. அதே வேளையில் அரசு எந்த மதத்தையும் சாராததாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போல்ஷ்விக்குகளின் இந்தக் கொள்கையைப் பாராட்டுவதாகக் காந்தி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட மாற்றங்கள்தான் சோவியத் சமுதாயத்தை ஒப்பிலாத சமுதாயமாக மாற்றியது.சொல்லப்போனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை சோவியத் அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தின. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வு உள்பட நவம்பர் புரட்சியின் அறம் என்று இன்னும் விரிவாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சோவியத் புரட்சி வரலாற்றிலிருந்து இன்று மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய சிந்தனைகள் என்ன? புதிய தலைமுறையினருக்கு அதன் செய்தி என்ன?
சோவியத்துக்குப் போய் வந்த பெரியார் பல முக்கியமான விசயங்களைக் கவனித்து எழுதியிருக்கிறார். அவற்றை இன்றைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றிபெற்ற ஒரு நாடு, வெற்றி கொண்ட நாட்டை அடிமைப்படுத்தாமல் சுதந்திர நாடாக இருக்க உதவியது என்பதெல்லாம் வரலாற்றில் மிக முக்கியமானது. அது உலக அளவிலேயே பலரையும் ஈர்த்த ஒரு மாற்றம். அதே போல், ரஷ்யாவில்தான் மையமான புரட்சி நடந்தது என்றாலும், பிற பகுதிகள் இணைகிறபோது அதற்கு ரஷ்யா என்ற பெயர் வைக்கப்படவில்லை. ஐக்கிய சோசலிச சோவியத் குடியரசுகள் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அரசியல் செய்தி இருக்கிறது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு இதுவும் ஊக்குவித்தது என்று சொல்லலாம். இன்று மொழித்திணிப்பு முயற்சிகள் இங்கே நடக்கிற பின்னணியில், நவம்பர் புரட்சி விழாவில், அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை என்ற சோவியத் கொள்கையை எடுத்துச் செல்ல வேண்டும். மனிதனுக்கும் உழைப்புக்கும் உள்ள உறவு சந்தைப் பொருளாதாரத்தில் அவமதிக்கப்படுகிறது. அந்த உறவுக்கு உன்னதமான மதிப்பு சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியம் என்ற செய்தியும் நவம்பர் புரட்சி விழாவில் இருக்கிறது. அதைப் போல், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்துச் சமத்துவ மாற்றங்களுக்குமான செய்தியை நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மக்களிடையே விரிவாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல செங்கொடி இயக்கத் தோழர்கள் உறுதியேற்க வேண்டும்.