செவ்வாய், 8 நவம்பர், 2016

செங்கொடிக்கே!






மார்க்சிய - லெனினியப் பாதையில் இந்தியாவிலும் சோசலிசத்தை நிலைநாட்டுகிற இயக்கம் வெற்றி பெறும்; இறுதி வெற்றி செங்கொடிக்கே என்பதுதான் நவம்பர் புரட்சியின் செய்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா நேர்காணல்




நவம்பர் புரட்சி நடந்த முதல் காலகட்டத்தில் பிறந்தவர் நீங்கள். ஒரு மாணவராக வளர்ந்து, விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்கத் தொடங்கியபோது, அந்தப் புரட்சியின் வரலாற்றையும் அதன் மகத்தான சாதனைகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம், சிந்தனைகள் பற்றிச் சொல்லுங்கள்.
தீக்கதிர் வாசகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1937-38-ஆம் ஆண்டுகளில் மாணவர் இயக்கத்தை உருவாக்கிச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது அந்த யுகப்புரட்சி பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டேன். லெனின் தலைமையில் ரஷ்யாவில் நடந்த அந்தப் புரட்சி அங்கே அடிமைப்பட்டுக்கிடந்த மக்களை மட்டும் விடுவிக்கவில்லை, பிரிட்டிஷ் அரசின் பிடியில் இருந்த காலனி நாடுகளின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெரும் எழுச்சியை ஊட்டி அந்த நாடுகளின் விடுதலைக்கும் வழிவகுத்தது. அந்தப் புரட்சியின் பலனாக உருவான சோசலிச சோவியத் யூனியன் அரசும், அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சுதந்திரப் போராட்டத்தையும் பேரலைகள் போல ஏற்படுத்தின. இந்தியாவிலும் சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. தமிழகத்தில் சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை ஏற்றி இங்கே இயக்கத்தை உருவாக்கியிருந்தார். 1929-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்குப் போடப்பட்டது. மீரட் சதி வழக்கு என்றே அதற்குப் பெயர். மக்களிடையே அது பெரிய சிந்தனையை விதைத்தது. 1934-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் சோசலிஸ்ட்டுகள் உருவாகியிருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் இணைந்து போராடத் தொடங்கினார்கள். அப்படி உருவாகி வந்த பி. சுந்தரய்யா, பி. ராமமூர்த்தி, இ.எம்.எஸ்., ஜீவா, ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்கள் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார்கள். இதற்கெல்லாம் உந்து சக்தியாகத் திகழ்ந்தது ரஷ்யப் புரட்சிதான். 1940-ஆம் ஆண்டில் மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை அமைத்து இயங்கிக்கொண்டிருந்தோம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம். 1930-ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் இட்லர் அதிகாரத்திற்கு வந்தவுடன் உலக ஆதிக்கத்திற்காகத் திட்டமிட்டான். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சோவியத்நாட்டை இட்லர் அழிக்க வேண்டுமென்பதற்காக ஜெர்மனிக்கு தொழில் மற்றும் பொருளாதார உதவி செய்தன. 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இட்லர் பிரிட்டனையும் பிரான்சையும் தாக்கினான். பின் 1941-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சோவியத் நாட்டின் மீது படையெடுத்தான். சோவியத் மக்கள் ஸ்டாலின் தலைமையில் வீரப்போர் புரிந்தனர். இட்லர் வெற்றி பெற்றால் உலகத்திற்கே ஆபத்து என்று உணர்ந்த பிரிட்டனும், பிரான்சும் சோவியத் நாட்டுடன் சேர்ந்து ஜெர்மனிக்கு எதிராகப் போராடத் தொடங்கின. அமெரிக்காவும் இதை ஆதரித்தது.ரஷ்யாவுக்கு ஏற்படும் ஆபத்து நமக்கும் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அறிவித்தார். 2 கோடி சோவியத் மக்களைப் பலி கொண்ட அந்த யுத்தத்தின் முடிவில் ஹிட்லர் மட்டுமல்லாமல், இனவாத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி அடிமைப்படுத்திய பாசிச சக்திகளும் முறியடிக்கப்பட்டன. அந்த வெற்றி, ஐரோப்பாவில் பல சோசலிச நாடுகள் உருவாக வழிவகுத்தது. ஏகாதிபத்திய முகாம் என்பது மட்டுமே இருந்த உலகத்தில் சோசலிச முகாம் என்பதும் உருவானது. அந்த வயதில் இந்த நிகழ்ச்சிப்போக்குகளும் சோசலிச சோவியத் யூனியனின் மகத்தான சாதனைகளும் அதற்கு அடித்தளமாக இருந்த கம்யூனிச சித்தாந்தமும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவில், தமிழகத்தில் மக்களை அடிமை நிலைமையிலிருந்து விடுவிக்கவும் சமத்துவமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து உற்சாகத்தோடும் உறுதியோடும் போராடுவதில் என்னைப் போன்றோர் ஈடுபடுவதற்குப் பெரும் உந்துசக்தியாக அவை அமைந்தன.
பாசிச சக்திகள் முடியடிக்கப்பட்டது பற்றிச் சொன்னீர்கள். இந்தியாவில் அதைப் போலப் பாசிச குணத்தோடு இன்று மக்களைப் பிளவுபடுத்துகிற சக்தி அரசியல் களத்தில் வெற்றிபெற்று ஆளுமை செலுத்துகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்கொள்வதில் நவம்பர் புரட்சி அனுபவம் எந்த அளவுக்கு நமக்கு ஒரு வழிகாட்டியாக அமைபும்?
வகுப்புவாத சக்திகளின் சித்தாந்த அடிப்படையைத் தகர்க்க வேண்டும். அதற்கு அறிவியல்பூர்வ அணுகுமுறை தேவை. அந்த அணுகுமுறையை மார்க்சியம் நமக்கு வழங்குகிறது. மார்க்சியம் வெல்ல முடியாதது, ஏனென்றால் அது உண்மையானது. அந்த உண்மையை அடித்தளமாகக் கொண்டுதான் சோவியத் அரசு பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்துவது என்ற சிந்தனையோடு செயல்பட்டது. சோவியத் யூனியனோடு இணைந்த அனைத்துப்பகுதி மக்களின் மொழிகளும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. பாசிச சக்திகளை முறியடிப்பதில் ஸ்டாலின் வகுத்த வியூகம் எப்படி வெற்றிபெற்றது என்பது உலக வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம். இந்தியாவில், தமிழகத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அடிப்படை மாற்றங்களுக்காக மக்கள் ஒன்றுபடுவதைத் தடுக்க மத உணர்வுகளும், சாதி வெறியும் கிளப்பப்படுகின்றன. அதை முறியடிக்க வேண்டுமானால், மார்க்ஸ் முழங்கினாரே, ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்,’ என்று, அந்த முழக்கத்தை வலுவாகவும், செயல்முனைப்போடும் இன்று நாம் மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட தொழிலாளிகள் - விவசாயிகள் அணி கட்டப்பட வேண்டும். அப்படியொரு முற்போக்கான அணியைக் கட்டுவதில், அதே போன்ற விரிவான மக்கள் அணியைக் கட்டிப் பெரும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய நவம்பர் புரட்சி நமக்கு நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பாடம்தான்.
அரசியல் களத்தில் சோவியத் புரட்சியின் தாக்கங்கள் பற்றியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் சொன்னீர்கள். மக்களின் வாழ்க்கையில், பண்பாட்டுத் தளத்தில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் எப்படிப்பட்டவை?
சமுதாய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சோவியத் புரட்சி தாக்கங்களை ஏற்படுத்தியது, மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது. அமீர் ஹைதர் கான் என்ற தோழரை கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது என் நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவான பலருக்கும் பயிற்சியளித்தவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு அவரை அழைத்து வந்தார்கள். உள்ளே நுழைகிறபோதே, அந்த முதுபெரும் வயதிலும் கம்பீரம் குறையாமல் கரம் உயர்த்தி உணர்ச்சி பொங்க ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கம் எழுப்பினார். அந்த உணர்வை இன்றைய இளம் தலைமுறை உள்வாங்கிக்கொண்டு செயல்படுமானால் இங்கேயும் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். சோவியத் புரட்சி இந்தியாவிலும் தமிழகத்திலும் கலை இலக்கிய உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. அன்றைய காலகட்டத்தில், அரசியல் மாற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும் வலியுறுத்துகிற உயிரோட்டமுள்ள நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எண்ணற்ற நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என்று இலக்கியத்தில் ஏற்பட்ட முற்போக்கான மாற்றங்கள் தனி வரலாறாகவே சொல்லப்பட வேண்டியது. 1936-ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமும் அமைக்கப்பட்டன. விவசாயிகள் சங்கமும் மற்ற அமைப்புகளும் விவசாயிகளையும் பிற பகுதி மக்களையும் அணி திரட்டிக்கொண்டிருக்க, அவர்களுக்குத் தத்துவ உறுதியையும் மாற்றம் பற்றிய நம்பிக்கையையும் விதைப்பதில் முற்போக்குக் கலை இலக்கியப் படைப்புகள் பங்காற்றின. அவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக அன்றைக்கு மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெண்களிடையேயும் செயல்பட்ட இளம் தோழர்கள் பின்னர் கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவெடுத்தார்கள். இன்றைய இளம் தோழர்கள் இந்தப் புரிதலோடு மக்களோடு இரண்டறக் கலந்து செயல்பட வேண்டும். இடதுசாரி மனப்போக்கு உள்ளவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அண்மையில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பிளீனம் வழிகாட்டியிருப்பது போல், சாதிய, மதவாத சக்திகளை எதிர்கொள்ள உழைப்பாளி மக்களிடையே வர்க்க உணர்வை வளர்க்க வேண்டும். அதற்கு இன்றைய முற்போக்குக் கலை இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் பங்கை அளிக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்படும் இளைய தோழர்களால் தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் பலமான கம்யூனிஸ்ட் இயக்கம் வளரும். அது அரசியலிலும் மக்கள் வாழ்க்கையின் கலாச்சாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் முற்போக்கான மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்குச் சவாலாக வந்திருக்கிற சாதிய, மதவாத சக்திகள் முறியடிக்கப்படும் என்றும் நம்புகிறேன்.
சோவியத் யூனியன் இன்று இல்லை என்ற பின்னணியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுவதன் இன்றைய பொருத்தப்பாடு என்ன? அதன் செய்தி என்ன?
உழைப்பாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவது சாத்தியமா என்று கேட்டார்கள். அது சாத்தியம் என்று நிரூபித்துக்காட்டினார்கள் நவம்பர் புரட்சியை நடத்திய மக்கள். உலகம் முழுவதுமாக மாற்றம் ஏற்படாமல் ஒரு நாட்டில் மட்டும் சோசலிச மாற்றம் என்பது நடக்குமா என்று கேட்டார்கள். சோவியத் மக்கள் அதை நடத்திக்காட்டினார்கள். சுரண்டலின் முற்றிய வடிவமான முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டுச் சமத்துவத்தின் அடித்தளமான சோசலிசம் நிலைநாட்டப்படுவதற்கான முதல்படிதான் சோவியத் அனுபவம். உலக மக்களை வாட்டுகிற வறுமை, சுகாதாரமின்மை, கல்வியின்மை, மனித உரிமைகள் மறுப்பு போன்ற எல்லா அவலங்களும் நீங்க வேண்டுமானால், உலக முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு உழைக்கும் வர்க்க அரசுகள் உருவாவதே வழி. அதை நடைமுறையில் செய்து காட்டியது சோவியத் யூனியன். இன்று சோவியத் யூனியனும், ஐரோப்பியாவில் இருந்த சோசலிச அரசுகளும் இல்லை என்பது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். சோவியத் யூனியன் இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் சோவியத் புரட்சி மறையவில்லை. இந்தப் பின்னடைவையும் கூட, உலக அளவில் மாற்றத்தை நோக்கிச் செல்கிற காலகட்டத்தில் கிடைத்திருக்கிற நடைமுறைப் படிப்பினைகளாகவே பார்க்கிறேன். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் மக்களின் பல்வேறு எழுச்சிகரமான போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதை என்னுடைய நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காண்கிறேன். மார்க்சிய-லெனினியப் பாதையில் நமது நாட்டிலும் சோசலிசத்தை நிலைநாட்டுகிற இயக்கம் வெற்றி பெறும், செங்கொடி வெற்றி பெறும். மார்க்சியம் வெற்றிபெறும், இதுதான் நவம்பர் புரட்சியின் செய்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக