சனி, 23 மார்ச், 2019


வர்க்க போராளி தோழர். எம். முருகையா மறைந்தார் !



BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளரும், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், BSNL தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான அருமைத் தோழர். எம். முருகையா சமீப காலமாக ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவினால், 21.3.2019 மாலை 5.30 மணியளவில் காலமானார் என்ற துயரம் வாய்ந்த செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்!
56 வயதே ஆன தோழர். எம். முருகையா, சாத்தூர் தொலைபேசி நிலையத்தில் பகுதி நேர ஊழியராக 1980- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். துவக்க காலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1988- ஆம் ஆண்டு ஒன்றாக இருந்த NFTE- E 4 லைன் ஸ்டாஃப் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தில் மாநில அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப் படுத்துவதற்கான பல்வேறு இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு, பிரேக் மஸ்தூர் நிரந்தரம் மற்றும் பல்வேறு கேஷுவல் லேபர் பிரச்னைகளுக்காக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளைப் பெற்றுத் தந்தார். 1989- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நிரந்தரம் பெற்றார். 1994- ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட இந்திய தொலைதொடர்பு ஊழியர் சங்கம் – ITEU லைன் ஸ்டாஃப் நான்காம் பிரிவு சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 
2001- ஆம் ஆண்டில் உருவான BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தற்போது வரை செயல்பட்டு வந்துள்ளார். 
1999- ஆம் ஆண்டு துவக்கப் பட்ட தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், 2013- ஆம் ஆண்டு முதல் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மாநில கவுன்சில் உறுப்பினராகவும், தொலைதொடர்பு தோழன் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். BSNL ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். 2013- ஆம் ஆண்டு சென்னை மாநில அலுவலகத்திற்கு மாற்றலாகிச் சென்றார். தேர்வின் மூலம் பதவி உயர்வு பெற்று, JUNIOR ENGINEER கேடரில் இறுதியாகப் பணியாற்றி வந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும், விருதுநகர் மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பணியாற்றியுள்ளார்.
தொலைதொடர்புத் துறையில் சுரண்டப்பட்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டி, சங்கமாக உருவாக்கியதிலும், அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம், பணி நிரந்தரம், ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ. போனஸ், பணித் தன்மைக்கேற்ற ஊதியம், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, நீக்கப் பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு சேர்த்தல் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களிலும், பேச்சு வார்த்தைகளிலும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கேந்திரமான பங்கை ஆற்றினார். இன்றைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட, 37 ஒப்பந்தத் தொழிலாளர்களை நீதிமன்றம் மூலம் நிரந்தரப் படுத்துவதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். 

உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த போதும் 28.1.2019 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர் சம்பள பிரச்னைக்காக சங்கத்தின் பிற தலைவர்களுடன் மத்திய தொழிலாளர் நலத் துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து, கடுமையாக வாதாடினார் என்பதை நினைவு கூர்கிறோம். 
அரசாங்க சட்டங்களிலும், இலாகா விதிகளிலும் ஆழ்ந்த அறிவு, கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை, கனிவான அணுகுமுறை, மாற்றுக் கொள்கையுடையவர்களிடமும் நட்பு என்ற சிறப்புகளுக்கு உரியவர். 
சுரண்டப் படும் தொழிலாள வர்க்கத்திற்காகவும், பொதுவுடைமைக் கொள்கைக்காகவும் உறுதியான போராளியாக வாழ்ந்து மறைந்தார்.
அவரது மறைவு நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
செங்கொடி தாழ்த்தி அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறோம் !
அவரது அர்ப்பணிப்பு உணர்வும், கொள்கைப் பிடிப்பும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் !
செவ்வணக்கம் தோழர் முருகையா !
அவரது மனைவி திருமிகு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், புதல்வன் பாரதிராஜா, புதல்வி கல்பனா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் நமது சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப் படுகின்றன.

அவரது இறுதி நிகழ்ச்சிகள் சாத்தூரில் 22.3.2019 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளன.

வியாழன், 7 மார்ச், 2019

மார்ச் 8 - மகளிர்  தினம் 

உழைப்பால் ஆனது உலகு 

தோழமைகளுக்கு வாழ்த்துக்களும் மரியாதையும் 



செவ்வாய், 5 மார்ச், 2019

வாழ்த்துகிறோம்..

அன்பார்ந்த தோழர்களே, 2019 மார்ச் 1மற்றும் 2ஆம் தேதிகளில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற TRADE UNION INTERNATIONAL OF TRANSPORT AND COMMUNICATIONS ந் 14வது மாநாட்டில் சிலி நாட்டின் தோழர் ரிக்கார்டோ தலைவராகவும், துருக்கியின் தோழர் அலி ரிசா பொதுச் செயலாளாராகவும் உள்ளிட்ட 23 தோழர்கள் அடங்கிய செயலகம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  நமது BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் COMMUNICATION பிரிவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு ஈரோடு மாவட்ட தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்  சங்கத்தின் மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..



வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள்



ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாடு

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம்
ஈரோடு மாவட்டம்.

எழுச்சியுடன் துவங்கி இனிதாய் முடிந்த
5வது மாவட்ட மாநாடு

அன்பார்ந்த தோழர்களே !

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஈரோடு மாவட்டத்தின் 5 வது மாவட்ட மாநாடு 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் தோழர்.எஸ்.குமரேசன் நினைவரங்கம், பெரியார் மன்றம், ஈரோட்டில் தோழர். N.சண்முகவேல், மாவட்டத் தலைவர் (பொறுப்பு), TNTCWU தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல் நிகழ்வாக தோழர் N.சின்னையன், மாநில அமைப்புச் செயலர், AIBDPA தேசியக்கொடியேற்றி துவக்கி வைத்தார். பின்னர் தோழர். K.D.மாதேஸ் (எ) கார்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர், TNTCWU சங்க கொடியேற்றி தோழர்.M.சையத் இத்ரீஸ், மாவட்ட உதவிச் செயலாளர், TNTCWU  கோஷங்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சியானது நடைபெற்றது.

மாநாட்டில் அஞ்சலி தீர்மானத்தை தோழியர்.S.சத்யப்பிரியா, மாவட்டத் துணைத்தலைவர், TNTCWU வாசித்தார். தலைமையுரை நிகழ்த்திய தோழர். N.சண்முகவேல், மாவட்டத் தலைவர், TNTCWU  BSNL நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த  ஊழியர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கிற பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி உரையாற்றினார். தோழர்.K.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர், TNTCWU மற்றும் வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் வரவேற்புரையில்  மாநாட்டில் கலந்து கொண்ட அத்துனை தலைவர்களையும் தோழர்களையும் வரவேற்று மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்ட நமது ஈரோடு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் உயர்திரு. K.S.வேங்கிட சுப்பிரமணியன், ITS  அவர்களையும், DGM (Admn) திரு.P.தங்கராஜு அவர்களையும் வரவேற்று உரை நிகழ்தினார்கள்.

சிறப்புரையாக நமது ஈரோடு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் உயர்திரு. K.S. வேங்கிட சுப்பிரமணியன் ITS அவர்களும், DGM (Admn) திரு.P.தங்கராஜு அவர்களும் கலந்து கொண்டு BSNL வளர்ச்சியில் ஒப்பந்த தொழிலாளர்களின் பங்கு என்கிற தலைப்பில் ஒப்பந்த ஊழியர்களின் உரிமைகளும் சலுகைகளும் குறித்த நேரத்தில் கிடைத்திட நமது மாவட்ட நிர்வாகம் இதுவரை உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் இனிமேலும் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்தனர். மேலும் BSNL நிறுவனத்தில் குறிப்பாக ஏர்செல் எனும் தனியார் மொபைல் சேவை முடங்கிவிட்ட போது நம்முடைய BSNL அதிகாரிகளும் ஊழியர்களும் மட்டுமல்லாமல் ஒப்பந்த ஊழியர்களும் மேற்கொண்ட பணிகள் தான் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக நம்முடைய ஈரோடு மாவட்டம் திகழ்ந்தது என்றும் தற்போது தனியார் நிறுவனங்களின் கடும் போட்டி காரணமாக வருவாயை இழந்து வரும் நமது BSNL நிறுவனத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு சிறப்பான சேவை செய்வதின் மூலம் வருவாயை மேம்படுத்தலாம் என்றும் உரை நிகழ்தினார்கள். 

மேலும் சிறப்புரையாக BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய கன்வீனர் தோழியர்.V.P.இந்திரா அவர்கள் ஒப்பந்த ஊழியர்களின் தற்போதய நிலைமை குறித்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் உரை நிகழ்தினார். மேலும் BSNL நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மற்றும் குழந்தை பராமரிப்பு விடுமுறைகள் உத்தரவினை பெற்றதை போலவே ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கும் உத்தரவினை பெறுவோம் என்கிற கோரிக்கைகளோடும் புதுச்சேரியில் நடைபெறும் BSNL உழைக்கும் மகளிர் மாநில மாநாட்டில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் மகளிர் ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உரை நிகழ்தினார்கள்.
    
வாழ்த்துரையாக தோழர்.V.மணியன், மாநில அமைப்புச் செயலர், BSNLEU,  தோழர்.P.சின்னச்சாமி, மாவட்டச் செயலர், AIBDPA மற்றும் தோழியர்.S.வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர், TNTCWU மற்றும் DYFI மாவட்டச் செயலர். தோழர்.சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள். 

மேற்படி நிகழ்வுகளாக காலை முதல் மதியம் வரை முற்பகல் நிகழ்ச்சிகள் இனிதாக நடைபெற்றது. மதிய உணவு இடைவேளையில் வரவேற்பு குழுவின் சார்பில் சிறப்பானதொரு மதிய விருந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இடையிடையே தேநீர் விருந்தும் கொடுத்து மாநாட்டை சிறப்பாக நடத்திய வரவேற்பு குழுவின் வரவேற்புகளும் உபசரிப்புகளும்  நிச்சயம் நாம் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

பிற்பகல் நிகழ்வுகளாக ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து நிதி நிலை அறிக்கையும் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர் உரை நிகழ்த்திய TNTCWU மாநிலச் செயலர் தோழர்.C.வினோத் குமார் ஒப்பந்த ஊழியர்களின் தற்போதய நிலைமை குறித்தும் எதிர்கால கடமைகளை குறித்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் விளக்கி உரை நிகழ்தினார்.
அமைப்பு நிலை விவாதத்தில் அனைத்து கிளைச் செயலர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் தொகுப்புரையாக உரை நிகழ்த்தினார். 

இம்மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்

·         BSNL நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு Re-categorization of work பணியின் தன்மைக்கேற்ப Skilled, Semi skilled & unskilled என்று உயர் ஊதியம் வழங்க வேண்டும்

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக நல பாதுகாப்பு அம்சங்களான EPF & ESI முறைப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் சம்பளம் பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் விடுமுறையில்லாமல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு விடுமுறைகளை வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity)  வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறையும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறையும் வழங்க வேண்டும்.

·         BSNL நிறுவனத்தின் வருவாயை கணக்கிட்டு ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

·         மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினையும், Fixed Term Employment என்கிற தொழிளார்களுக்கு எதிரான சட்ட மசோதாவையும்  இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

·         CLC உத்தரவான ‘B’ City category மாநகராட்சி எல்லையிலிருந்து 15 கி.மீ க்கு பொருந்தும் என்கிற உத்தரவை தமிழ் மாநிலம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அமுல் படுத்திட வேண்டும்.

·         BSNL தனியார் மயம் கூடாது. BSNL டவர்களை தனியாக பிரித்து தனி டவர் கம்பெனி என்று சொல்லி தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிடவேண்டும்.
மாநாட்டு தீர்மானங்களாக ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறாக மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்று மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் மாவாட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                                           தோழர்.M.சையத் இத்ரீஸ், பெருந்துறை

உதவித் தலைவர்கள்                        தோழர்.N.சண்முகவேல், DE (Extl)
  தோழியர்.S.சத்யப்பிரியா, T/B, ERD
  தோழர்.கருப்பண்ணன், பவானி
  தோழர்.K.சோமசுந்தரம், மூலனூர்

செயலர்                                            தோழர்.K.பழனிச்சாமி, DE (Extl)

உதவிச் செயலர்கள்கள்                   தோழர்.L.பரமேஸ்வரன், DS BSNLEU
 தோழர்.சுப்பிரமணியன், ஓலப்பாளையம்
 தோழர்.S.கோபால், பெருந்துறை
 தோழியர்.சித்ரா, DE (Extl)

பொருளாளர்                                    தோழர்.S.சரவணன், T/B ERD

உதவிப் பொருளாளர்                      தோழர்.R.தம்பிக்கலையன், DE (Extl)

அமைப்புச் செயலர்கள்கள்              தோழர்.T.மாரிமுத்து, தாராபுரம்
 தோழர்.கார்த்தி, சத்தி
 தோழர்.விஸ்வநாதன், DE (Rural)
 தோழர்.N.தங்கவேல், காங்கயம்
 தோழர்.வெள்ளியங்கிரி, கோபி
 தோழர்.சண்முக சுந்தரம், ஈரோடு OFC
 தோழர்.சக்திவேல்,அந்தியூர்

புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற தோழர்.M.சையத் இத்ரீஸ் தணிக்கையாளராக தோழர்.L.பழனிச்சாமி, OS, பவானி அவர்களை நியமித்தார்.

வாழ்த்துரையில் BSNLEU மாநில உதவிச் செயலாளர் தோழர். சுப்பிரமணியன் புதிய மாவட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

மாவட்டத் தலைவர் தோழர்.எம்.சையத் இத்ரீஸ் நன்றியுரை கூறி மாநாட்டை முடித்து வைத்ததுடன் வரவேற்பு குழு தலைவரும், BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான தோழர்.L.பரமேஸ்வரன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களோடு இம்மாநாடு இனிதே நிறைவடைந்தது.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்

தோழமையுடன்

     M.சையத் இத்ரீஸ்                            K.பழனிச்சாமி,                              S.சரவணன்
    மாவட்டத் தலைவர்                        மாவட்டச் செயலர்                  மாவட்டப் பொருளாளர்
      TNTCWU                                TNTCWU                              TNTCWU

வெள்ளி, 10 மார்ச், 2017

தோழர்களே  வணக்கம்,  நமது  நீண்ட  நாளைய  கோரிக்கை  ஆன ஊதிய  மாற்றம்  7.3.2017 அன்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது . அதில்  ஈரோடு  மாநகராட்சியை B கிரேடு நகரமாக  தரம் உயர்த்தி உள்ளது.  இந்த B கிரேடு நகரம்  என்பது  மாநகராட்சி  எல்லையில்  இருந்து  15 கிலோ மீட்டர்  தூரம் வரை  பொருள் தும்.  எனவே ஈரோடு  அதனை சுற்றி உள்ள பகுதிகளில்  பணி  புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  ஊதியம்  6500 லிருந்து  ரூ 11362 ஆக உயரும்.  மற்ற  பகுதிகளில்  பணி  புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  9100 வழங்கப்படும்.  இந்த ஊதியம்  மாற்றம்  பெருவதற்கு நமது  அகில இந்திய,  மாநில,  மாவட்ட, கிளை  BSNLEU, BSNLCCWF, TNTCWU  சங்கங்கள்  நீண்ட காலமாக  கடுமையாக  போராட்டங்களை நடத்தி  உள்ளம்.  இறுதியாக  பாராளுமன்றம்  நோக்கி 4000  பேர் கலந்து  கொண்ட  பேரணி  நடத்தியதன்  விளைவாக  நாம்  வெற்றி பெற்றுள்ளோம். இந்த  வெற்றியை  கொண்டாடும் விதமாக  கிளைகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்க வேண்டும் என மாவட்ட  சங்கங்களின் சார்பில்  கேட்டுக்  கொள்கிறோம். தோழமையுடன் க.பழனிச்சாமி மாவட்ட செயலாளர் ஈரோடு.

----------------------------------------------------------------------------
தோழர்களே ஈரோடு மாவட்டம்  DE ( RURAL ) கிளையின் சார்பில் ஊதிய உயர்வு வெற்றி கொண்டாட்டம் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் C. பரமசிவம், BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர்  V. மணியன்,   TNTCWU மாவட்ட செயலாளர் தோழர்  K. பழனிசாமி  ஆகியோர் கலந்து கொண்டனர்.
=======================================================================
வெற்றியை  கொண்டாடும் விதமாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் பெருந்துறை கிளையின் சார்பாக கிளைச் செயலாளர். சையத் இத்ரீஸ், கிளைப் பொருளாளர் திருநாவுக்கரசு (விவேக்) மற்றும் ரகுநாத் தலைமையில்  கிளைகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மேலும் அனைத்து ஊழியர்களையும் இணைத்து நாம் பெற்ற வெற்றியை விளக்கி கூறும் பொருட்டு சிறிய அளவிலான கூட்டம் போட்டு தோழர். மணி , BSNLEU,  தலைமையில் விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தை வாழ்த்தி பேசுவதற்காக தோழர்.தங்கவேல், Retd, BSNLEU, தோழர்.செல்வசுதர்சனன் SNEA (I), பெருந்துறை,  தோழர்முருகசாமி SNEA (I),  பெருந்துறை  மற்றும் தோழர் துரைசாமி SNEA (I) மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதிரத்தினை உரங்களாக்கி 
வியர்வையில் தினமும் நனைந்து 
உடல்நலம் மறந்த 
உண்மையான உழைப்பாளி 

உண்ண மறந்திருந்து 
உறவும் பிரிந்திருந்து 
திருப்தியான ஊதியத்திற்காய் 
தினம்தினம் போராட்டம் 

நாட்டின் அபிவிருத்தியை 
சிந்திக்கும் அரசுகளும் 
ஆணிவேர் தொழிலாளரென்று மறந்து 
அவன் முன்னேற்றம் கருதாத 
ஆட்சியாளர் கூட்டங்கள் 

அதிகநேரம் வேலைவாங்கி 
சம்பளத்தையும் தரமறுத்து 
இவன் சிந்திய உதிரத்தில் 
சொகுசாய் வாழும் முதலாழிகள் 

குழந்தையின் கல்வியென்றும் 
குடும்பத்தின் பராமரிப்பென்றும் 
ஒருதவணை உணவுக்காய் 
திண்டாடும் தொழிலாளர் 

எவ்வர்க்கமாகினும் உணர்ந்து 
தொழிலாளர் வர்க்கம் சிறந்திட 
சிந்திக்காத மனிதர்களை 
சீர்செய்யும் தினமாகட்டும் இன்னாள்


கவிதை : ஹாசிம் (www.eegarai.net)